சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(26) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவரும், கணேஷ் நகர் பகுதியில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பிரவீனும் ஷர்மிளாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சாதி மதங்களை மறந்த இவர்கள் தங்களது காதலைத் தொடர்ந்தனர்.
பெண்ணின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அவர்கள் உடனடியாக ஷர்மிளாவுக்கு தனது சொந்த சமூகத்திலேயே திருமண வரன் பார்த்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஷர்மிளா, இச்சம்பவம் குறித்து தன் காதலனான பிரவீனிடம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தக் காதல் ஜோடி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய ஷர்மிளா, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தன் காதலன் பிரவீனை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் ஷர்மிளாவின் பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. மாற்று சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்ததை அடுத்து பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில், திருமணம் செய்துகொண்ட இந்தக் காதல் ஜோடி 2 மாதங்கள் வெளியூரில் வசித்துவந்த நிலையில் ஜனவரி மாதம் தான் பள்ளிக்கரணை பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, ஷர்மிளாவின் அண்ணனான தினேஷ் என்பவர் பிரவீனை கொலை செய்துவிடுவேன் எனத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சூழலில், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பிரவீன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அன்றைய தினம் தனது மனைவி ஷர்மிளாவுடன் இருந்த பிரவீன், இரவு 9 மணியளவில் சாப்பாடு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது, இதற்காகவே காத்துக்கொண்டிருந்த ஷர்மிளாவின் அண்ணன் தினேஷ், தனது 4 நண்பர்களுடன் வந்து பிரவீனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இந்தக் கொலை வெறி தாக்குதலில் பிரவீன் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீன் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பிரவீன் கொல்லப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி ஷர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மேலும், வெட்டுக்காயங்களுடன் இருந்த பிரவீனின் உடலைப் பார்த்து அழுததில் அந்த இடம் முழுக்க சோகத்தில் மூழ்கியது.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். அப்போது, டாஸ்மாக் கடை வாயிலில் வைத்து பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் 4 நபர்கள் பிரவீனை ஆணவக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், இந்த வழக்கை துரிதப்படுத்திய பள்ளிக்கரணை உதவி ஆணையர் தலைமறைவான தினேஷ் மற்றும் அவரது நண்பர்களைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், பிரவீனை கொலை செய்த பெண்ணின் அண்ணன் தினேஷ் மற்றும் அவருடைய நண்பர்களான ஸ்டீபன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீராம் மற்றும் ஜோதிலிங்கம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஷர்மிளா, தனது கணவன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், பிரவீன் கொலை வழக்கில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், " குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது ஷர்மிளா மிரட்டப்பட்டதாகவும், பிரவீன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமான ஷர்மிளாவின் பெற்றோர் துரை - சரளா மற்றும் அவரது அண்ணனான நரேஷ் ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை. தற்போது, சிறையில் இருக்கும் ஷர்மிளாவின் சகோதரர் தினேஷ் ஏப்ரலில் பெயிலுக்கு விண்ணப்பித்த நிலையில் இது ஷர்மிளாவுக்கு தெரியப்படுத்தாமல் இருந்துள்ளனர். அதே நேரம், தனது கணவரை இழந்த துக்கம் தாளாமல் இருந்த ஷர்மிளா போலீசாரின் அலட்சிய போக்கால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், யாரும் எதிர்பாராத சமயத்தில் தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காது என்று எண்ணிய ஷர்மிளா, கடந்த 14 ஆம் தேதியன்று அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் மாமனார், மாமியார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதில், ஷர்மிளாவுக்கு கழுத்து எலும்பு, நரம்பு, உள்ளிட்டவை பாதிக்கப்பட்டதால் அவர் கோமா நிலைக்குச் சென்றார் . இதையடுத்து அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷர்மிளா, கடந்த திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய கணவன் கொலை செய்யப்பட்ட 2 மாதங்களில் மனைவியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையை உலுக்கியுள்ளது.
அதே வேளையில், ஷர்மிளா தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "தனது கணவர் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாகவும், தன் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என்று ஷர்மிளா தன்னுடைய குடும்பத்தார் பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், பிரவீனின் மாமியார், ஷர்மிளாவின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன்பேரில், ஷர்மிளா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.