வாழ்ந்த வீட்டை விட்டு ஓட வைத்து, ஒரு பெரிய சோகத்தை குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் பேச்சிப்பாறை அணை அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசு கொடுத்த பட்டா நிலத்தில் 48 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு பேச்சிப்பாறை அணையை பலப்படுத்துவதற்காக உலகவங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சீரோபயிண்ட் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்து. இதனையடுத்து அந்த வீடுகளை இடிக்க மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு மாற்று இடமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வசதியில்லாதது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால் அந்த மக்களுக்கு ஆதரவாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் நடத்தினார்கள். ஒரு நாள் முமுவதும் நடந்த சாலை மறியலை அடுத்து பத்மனாபபுரம் சப்-கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் முடிவு எட்டப்படாததால் மீண்டும் கலெக்டரிடம் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என சப்-கலெக்டர் கூறியதோடு அதுவரை குடியிருப்புகளும் இடிக்க படமாட்டாது என்று கூறினார்.
இதை நம்பியிருந்த அந்த குடியிருப்பை சேர்ந்த மக்கள் நேற்று வழக்கம் போல் அவர்கள் கூலி வேலைகளுக்கும் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். வீட்டில் வயதானவர்கள் மட்டும் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அங்கு ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை கொண்டு போலிசோடு அங்கு குவிந்த வருவாய்துறையினர் அந்த 48 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினார்கள். மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் துணி மணிகளை வெளியே தாறுமாறாக வீசினார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மக்கள் எங்கே செல்வது என புரியாமல் அவர்களுடைய பொருட்களை எடுத்து கொண்டு ரப்பர் தோட்டத்தில் குழந்தை குட்டிகளோடு தஞ்சம் அடைந்தனர். தற்போது இனி எப்போது வீடு கட்டி வீட்டுக்குள் தஞ்சம் அடைவது என்ற ஏக்கத்தில் உள்ளனர். மேலும் மாற்று இடத்தில் வீடு கட்டும் வரை வீடுகளை இடிக்க மாட்டோம் என கூறிய அதிகாரிகள் அதற்குள் வீடுகளை இடித்து விட்டார்களே என கதறியவாறு எங்கே செல்வது என்று திசை தெரியாமல் நிர்கதியாக நிற்கிறார்கள்.