மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இந்தக் கலவரத்தின் உச்சமாக குக்கி இனப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பின், நிர்வாணமாக அடித்து கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டது, ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக குவஹாத்தியில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மே 3, 2023 அன்று மணிப்பூரில் வெடித்த கலவரத்தின் ஆண்டு நினைவு தினம் இன்று. முழுமையாக 365 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் பிரதமர் மணிப்பூருக்குச் செல்ல விருப்பம் காட்டவில்லை அல்லது அதற்கு நேரம் இல்லை போலும். பிப்ரவரி 2024 வரை மணிப்பூரில் 219 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 60,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் வாழ்கின்றனர். வீடுகள் இடிக்கப்பட்டன மற்றும் வழிபாட்டுத் தலங்கள், கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன.
மணிப்பூர் மாநிலம் கிட்டத்தட்ட இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிர்வாகங்கள் அங்கு உள்ளன ஒன்று மெய்திக்கு (Meiteis) மெய்தி, மற்றொன்று குக்கீஸ் (Kuki-Zomos) மூலம் குக்கீஸ் என பிரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் இன்னமும் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசாங்கத்தால் மேம்போக்காக ஆளப்படுகிறது. பிஜேபியின் உறுதியான ‘கிழக்கில் செயல்படும்’ ( act east ) கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ‘கிழக்கைப் பார்’ (Look East) கொள்கையை விட முன்னேற்றம் என்று கூறப்பட்டது. இருப்பினும், மோடியின் அரசாங்கம் மணிப்பூரை பார்க்கவோ, பதற்றமான இம்மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவரவோ மறுத்து விட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 355 வது பிரிவு முடமாக உள்ளது. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவு துருப்பிடித்து வருகிறது. இதற்கிடையில், மணிப்பூர் மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகின்றனர். மணிப்பூர் மக்களுக்காக நான் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.