டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி(21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அன்றைய தினமே (21.03.2024) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை ‘சட்டவிரோத கைது’ என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த 9 ஆம் தேதி (09.04.2024) உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (03-05-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் வரத் தொடங்கிய நாள் முதல், அவரைக் கைது செய்ய இது சதி என்று ஆம் ஆத்மி வெளிப்படையாகக் கூறியது. இது அமலாக்கத்துறை சதி அல்ல, பா.ஜ.க சம்மன்கள். அப்போதும் கூட பாஜக செய்தித் தொடர்பாளர்கள், அமலாக்கத்துறை ஒரு சுயாதீன விசாரணை நிறுவனம் என்றும் சம்மனுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறினர்.
10 ஆண்டுகால தவறான ஆட்சியை, கெஜ்ரிவாலால் அம்பலப்படுத்த முடியும் என்பதால் பாஜகவுக்கு பயம். அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் அவர்களின் அமலாக்கத்துறைக்கும் முதல் நாளிலேயே இருந்ததாக அமித் ஷாவே கூறியுள்ளார்” என்று கூறினார்.