ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.
அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்பப் பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.
இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.
நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.