சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வளைகாப்பிற்காக கொல்லம் விரைவு ரயிலில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 21) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பயணித்த இந்த ரயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரது உறவினர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யாததால் சுமார் 10 நிமிடங்கள் கழித்து 8 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று ரயில் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி வந்து கர்ப்பிணியை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார். நாளை மறுநாள் (05.05.2024) வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்தது அவரது உறவினர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருப்பதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே கூறியதாவது, ‘கொல்லம் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழந்து உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில் பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படுகிறதா? எனவும், ரயில் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்வதற்கான விசாரணையும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைத்து ரயில்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் சரிவர இயங்குகிறதா எனக் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளது.