Skip to main content

'எம்.ஜி.ஆருக்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை; பொய் என்றாலே மோடிதான்'-டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
nn

தேர்தல் நேரத்தில் வரும்போதெல்லாம் ஒரு பொய்யை பேசுவார் மோடி என திமுகவின்  டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''எம்ஜிஆரை பற்றி நாங்கள் எதுவுமே சொல்வதில்லை. எம்ஜிஆர் அண்ணா வழியில் வந்தவர். அவர் கட்சியில் கூட அண்ணாவின் பெயரை வைத்தார். அண்ணாவின் வழியிலேயே கலைஞரின் வழியிலே தான் இன்றைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் இந்த ஆட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது.

'தமிழின் உயர்வு; தமிழ் மக்களின் நலன்; கல்விக்கு முக்கியத்துவம்; அனைவரும் படிக்க வேண்டும்' என்ற எண்ணம் இவற்றையெல்லாம் தான் அண்ணா தான் சொல்லிக் கொடுத்தது. எம்ஜிஆரை அரசியல் ரீதியாக அவர் இருந்த காலத்தில் நாங்கள் எதிரியாக பார்த்திருக்கலாம். இருந்தாலும் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக, திமுகவின் கொள்கைகளை, அண்ணாவின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வந்தார். கலைஞரோடு நெருங்கிய நட்பில் இருந்தார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து இருக்கலாம். மற்றபடி எம்ஜிஆருக்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யவும் இல்லை. பேசவும் இல்லை.

ஜிஎஸ்டியில் ஒன்றிய அரசு சில தவறான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பொருள் 45 நாட்களுக்கு விற்பனையாகவில்லை என்றால் அது ஏன் விற்பனையாகவில்லை என்று யோசிக்காமல், அந்த பொருளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. விற்பனையாகாத பொருளுக்கு எப்படி வரி கொடுக்க முடியும். இது குறித்து நாங்கள் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொல்வோம்.

இவ்வளவு மோசமாக ஆட்சி நடத்த முடியாது என்று எல்லோராலும் பேசப்படும் கட்சியாக பாஜக இருக்கும். மோடி என்பவர் தேர்தல் நேரத்தில் ஒரு பொய்யை சொல்வார். 2019 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அவர் என்ன சொன்னார் என்றால், 'காங்கிரஸ் அரசு எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை பரிசீலனை செய்யாமல் தூக்கி கிடப்பில் போட்டது. நாங்கள் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம். விவசாயிகளுக்கு 150 சதவிகிதம் அடிப்படை விலை நிர்ணயம் செய்து தருவோம்; என்று சொன்னார்கள். இன்றைக்கு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கேள்வி எம்.எஸ்.சுவாமிநாதன் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அடிப்படை ஆதார விலையை பற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். முழங்கினார் மோடி. காங்கிரஸ் விவசாயிகளை வஞ்சிக்கிறது. நாங்கள் இதை செய்வோம் என்று சொன்னார். இன்னும் விவசாயிகளுடைய ஒற்றை கேள்வி மூன்று சட்டங்களை திரும்ப பெற்ற பிறகும் அடிப்படை ஆதாரங்களை பற்றி இந்த அரசாங்கம் என்ன சொல்கிறது?என்பதுதான்.

வாய் மூடி மௌனமாக இருக்கிறார் மோடி. அப்படி என்றால் அவர் தேர்தல் நேரத்தில் சொல்லும் பொய்களில் மிகப்பெரிய பொய்யாக இந்திய விவசாயிகளை வஞ்சிக்கும் பொய்யாக இதை நான் பார்க்கிறேன். தொடர்ந்து அவர் பேசும்போது ஒன்றை சொல்வார். பேசி முடித்த பிறகு அவருடைய நடவடிக்கை வேறு ஒன்றாக இருக்கும்''என்றார்.

சார்ந்த செய்திகள்