தமிழகம் முழுவதும் தண்ணீரில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். குடிக்க, குளிக்க என அனைத்துக்கும் பணம் தந்து தண்ணீரை வாங்கிக்கொண்டுள்ளார்கள். பணம் தந்து வாங்கும் தண்ணீரும் சரியாக கிடைப்பதில்லை. இந்த துயரத்தை போக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தமிழகத்தை ஆளும் அதிமுகவின் எடப்பாடி அரசை கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் ஜீன் 22ந்தேதி போராட்டம் நடத்தியது.
வேலூர் மாநகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு அரசாங்கத்தை கண்டித்து பேசியவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக தண்ணீர் எடுத்து சென்றால் பெரும் போராட்டம் நடத்துவோம் என சொன்னது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில்.
நெட்டிஸன்கள், கர்நாடகாகாரன், கேரளாக்காரன் தண்ணீர் தரமாட்டேன்கிறான்னு போராட்டம் செய்துக்கிட்டு இருக்கோம், பக்கத்து மாவட்டத்துக்காரங்களுக்கு நாம் தண்ணீர் தரமாட்டேன்னு சொல்றது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிக்கொண்டுள்ளனர். திமுக எதிர்பார்களோ, சென்னைக்கு தண்ணீர் தரமாட்டோம்ன்னு திமுக சொல்லுது பாருங்க என சிண்டு முடிகிறார்கள் இணையத்தில்.
இதுப்பற்றி திமுக பொருளாளர் துரைமுருகனை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, நான் சொன்னதை திரிச்சிட்டாங்க. வேலூர் மாவட்டத்துக்கு ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக அரக்கோணம் வரை தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரே வேலூர் மாவட்ட மக்களுக்கு வாரத்துக்கு இருமுறை தான் கிடைக்கிறது. இந்த நிலையில் அந்த ஓக்கேனக்கல் கூட்டு குடிநீரை வேலூர்க்கு வருவதை தடுத்து அந்த தண்ணீரை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது அரசாங்கம்.
நானும் சென்னையில் தான் உள்ளேன், சென்னை மக்களுக்கு தண்ணீர் தேவை தான். அதை பூர்த்தி செய்ய வேறு வழிகள் உள்ளது. அந்த வழிமுறையில் சென்னைக்கான தண்ணீரை கொண்டு வந்து மக்களின் தாகத்தை தீர்ப்பதை விட்டுவிட்டு ஏற்கனவே தண்ணீர் கஸ்டத்தில் உள்ள வேலூர் மாவட்ட மக்களுக்கு வரும் தண்ணீரை தடுத்து வேறு இடத்துக்கு எடுத்து செல்வது, இந்த பகுதி மக்களுக்கு செய்யும் துரோகம். அது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதால் தான் போராட்டம் நடத்துவேன் எனச்சொன்னேன். நான் கருத்து கூறியதன் பின்னால் இந்த விவரம் உள்ளது என்றார்.
சென்னை மட்டும் குடிதண்ணீரில்லாமல் தவிக்கவில்லை. தமிழகம் முழுவதுமே அந்த தட்டுப்பாடு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தினம் 10 இடத்தில் தண்ணீருக்காக போராட்டம், மறியல் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடதக்கது. அந்த விதத்தில் பார்க்கும்போது துரைமுருகன் கூறியது சரியே என்கிறார்கள் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பலரும்.