கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கண்டப்பங்குறிச்சியில் பவானி வித்யாஷ்ரம் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களிருந்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பள்ளி வாகனத்தில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலத்திலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு, கண்டப்பங்குறிச்சி அருகே சென்று கொண்டிருக்கும் போது, விளாங்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் மோதியது. பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு, விருத்தாசலம் அரசு பொதுமருத்துமனைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பிவைத்தனர். இதில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 28 குழந்தைகளுக்கு தலை , கை, கால்களில் பலத்த அடிபட்டிருந்தது
. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவத்தை அறிந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு வந்த பள்ளியின் தலைமையாசிரியரை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி குழந்தைகளுடன், விருத்தாசலம் கடைவீதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். பின்னர் காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு அவர்களிடம் கூறியதால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் எற்பட்டது. பின்னர் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துரையினர் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். மேலும் தொடர் கதையாகிவரும் இப்பள்ளியின் வாகன விபத்தை தடுக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக பள்ளியை முற்றுகையிடும் பொராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். இதே பள்ளியில் கடந்த 6 மாதங்களில் 2 முறை பள்ளி வாகனம் விபத்துகுள்ளானது குறிப்பிடத்தக்கது.