
காவேரியை தர மறுக்கும் கர்நாடக மாநிலத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை தரக்கூடாது என வலியுறுத்தி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் விவசாய சங்கங்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், தமிழ் அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களை சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நெய்வேலி அரசு மருத்துவமனையிலிருந்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் தொடங்கிய பேரணியை உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடங்கி வைத்தார். கியூ பாலம் வரை பேரணி வந்த பேரணி நிறைவுற்றது. கியூ பாலம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், சிந்தனைச்செல்வன், தெஹலான் பாகவி, கி.வெங்கட்ராமன், சுப.உதயகுமார் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

"காவிரி வராதா? கரண்டும் வராது..."
"தண்ணீர் கொடு, இல்லையேல் தண்ணுரிமை கொடு" போன்ற முழக்கங்கள் போராட்டத்தில் விண்ணை பிளந்தன.
போராட்டத்தையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.