![Dharmapuri police inspector passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/lN9QIRXs2I-7MuSSR1FN6CgmtkU2sJ_mtNuWBSgz8Zc/1660885143/sites/default/files/inline-images/th_3061.jpg)
உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரி மாவட்டக் காவல்துறை ஆய்வாளர் இளங்கோ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோ (56). காவல்துறை ஆய்வாளர். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இளங்கோ, தர்மபுரி மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அயல்பணியாக அண்மையில் அவர், தர்மபுரி மாவட்ட காவலர் பயிற்சிப் பள்ளியில் முதன்மை சட்ட போதகராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பு இருந்து வந்தது. இந்நிலையில், ஆக. 9ம் தேதி, அவர் மருத்துவ விடுப்பில் சென்றார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நாளுக்குநாள் உடல்நலம் மோசமடைந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (ஆக. 18) காலை உயிரிழந்தார். அவருடைய உடல், ஆட்டையாம்பட்டியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருடன் பணியாற்றிய காவல்துறையினர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.