தர்மபுரி அரசு மருத்துவமனையில் தடயவியல் துறை மருத்துவராக பணியாற்றி வந்த மதன்ராஜ், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடயவியல் துறை (பாரன்சிக் மெடிசின்) உதவி பேராசிரியாக பணியாற்றி வந்தவர் மதன்ராஜ் (44). இவர் பணியின்போது ஒழுங்கீனமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி, எம்.பி.பி.எஸ் படித்து வரும் மாணவ, மாணவிகளிடம் முழு விசாரணை நடத்தியது. இந்த கமிட்டியின் விசாரணை விவரங்கள் குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது, “வகுப்பறையில் மாணவர்களை ஒழுங்கீன சொற்களைக் கொண்டும், ஆபாசமாகவும் திட்டி வருவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில மாணவர்களை வைத்து வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். மேலும், அவருக்கு பிடிக்காத சில மாணவர்களை, மாணவிகள் முன்னிலையில் ஆபாசமாக திட்டி வந்துள்ளார். இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவர்கள் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளனர். அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்த மாணவர்களை மிரட்டி, ஒவ்வொருவரிடமும் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று எழுதி வாங்கியுள்ளார். தடயவியல் மருத்துவர் என்பதால் நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகளுடன் நட்பு வைத்துக்கொண்டு, சக மருத்துவர்களை மிரட்டி வந்துள்ளார்'' என்கிறார்கள்.
இதையடுத்து, மதன்ராஜிடம் கருத்து கேட்டபோது, அவரும் குறிப்பிட்ட ஒரு மாணவரிடம் கடுமையாக நடந்து கொண்டது உண்மைதான் என்றும், வகுப்பறையில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதும் தவறுதான். அதை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினார்.
இதுகுறித்த விரிவான செய்தி, படங்கள் நக்கீரன் 2022, ஜூலை 16-19 நாளிட்ட இதழில் வெளியானது. நக்கீரன் இதழ் பெருநகரங்களில் ஜூலை 15ம் தேதியே வெளியான நிலையில், நக்கீரன் கட்டுரை அடிப்படையில் மருத்துவர் மதன்ராஜ் குறித்து விசாகா கமிட்டியிடம் விசாரித்துள்ளார் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.
நக்கீரன் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த விவரங்கள், கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த புகார்கள் அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஜுலை 15ம் தேதி, மாலையே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.