புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ள 25 வார்டுகளில் 17 வார்டுகளை தி.மு.க கூட்டணி கட்சியினர் கைப்பற்றி உள்ளனர். அதனால் தி.மு.கவை சேர்ந்தவர்களில் ஒருவருக்கு தான் சேர்மன் ஆகும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. ஆனால் இதில் சேர்மன் வேட்பாளராக தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் இருவர் தங்கள் மனைவிகளை கொண்டு வர முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று (06.01.2020) ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பதவி ஏற்பதற்காக திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளரான ஞான.இளங்கோவன் தனது ஆதரவு வேட்பாளர்களைப் பதவி ஏற்பு நிகழ்விற்காக ஒன்றாக அழைத்து வந்தார். அவர்கள் பதவி ஏற்ற பிறகு வெளியே வந்த போது, அங்கு தயாராக நின்ற தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி தரப்பினர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான.இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களை தாக்கிவிட்டு 4 கவுன்சிலர்களை வலுக்கட்டாயமாக கார்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் அந்தப் பகுதி போர் களமாக காட்சி அளித்தது. ஒரே கட்சிக்குள் இரு தரப்பாக பிரிந்து கவுன்சிலர்கள் கடத்தல், மோதல் சம்பவத்தால் அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.