சிக்கல் சிங்காரவேலர் ஆலய வேல்வாங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி காவல் துறைஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகலந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க ஆயிரகணக்கான பக்தர்கள் நாடெங்கிலும் இருந்து குவிந்ததால் அங்கு மாவட்ட காவல்துறை சார்பாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவிலின் உள்ளே கூட்டத்தை கட்டுபடுத்திக்கொண்டிருந்த வேளாங்கண்ணி ஆய்வாளர் சாமிநாதன் பணியில் இருக்கும்பொழுதே திடிரென மயங்கி கீழேவிழுந்தார்.
மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த காவலர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், எந்த அசைவும் இல்லாத போனதால் ஆய்வாளர் சுவாமிநாதனை சக காவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சக காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வாளர் சுவாமிநாதன் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிறந்தது தஞ்சை மாவட்டம் என்றாலும் திருவாரூர் மாவட்டத்திலும் பிறகு நாகை மாவட்டம் மயிலாடுதுறை, மணல்மேடு, உள்ளிட்ட காவல்நிலையங்களில் சிலமாதங்களும் ஆய்வாளராக இருந்தவர் வேளாங்கண்ணி காவல்நிலையத்திற்கு மாற்றலாகி சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார்.
காவல்துறை ஆய்வாளர் சாமிநாதன் பணியின்போது உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.