நடிகர் சங்க பொதுச் செயலாளரும் திரைப்படசங்க தலைவருமான நடிகர் விஷால் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகிறார். அதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை சந்திக்க கடந்த 29ம்தேதி மாலை திண்டுக்கல் மாநகருக்கு வந்தார். அவரை சூப்பர் டிவி உரிமையாளர் ரமேஷ் முரளி உள்பட சில தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்கள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் பிரபல விவேராகிராண்ட் ஹோட்டலில் நடிகர் விஷால் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வந்திருந்த ஐம்பதுக்கு மேற்பட்ட உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை சந்தித்து அவர்களுடைய கருத்துகளை தனித்தனியாக பேசச்சொல்லி கேட்டார்.
பிறகு அவர் அளித்த பேட்டியில்,
கடந்த சில தினங்களுக்கு முன் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் காப்பிரைட் கட்டணத்தை குறைக்க கோரியதை தொடர்நது ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்திலிருந்து தற்போது 25% குறைப்பதாக கமிட்டியில் முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். ஆனால் இங்கு கூடியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தொலைகாட்சி உரிமையாளர்களோ காப்பிரைட் கட்டணத்தை 50% குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதுபோல் உள்ளூர் தொலைக்காட்சியின் தற்போதைய நிலைமை முழுவதையும் கேட்டறிந்தேன். அதனால் உங்களுடைய கோரிக்கைகளை கமிட்டியில் எடுத்து சொல்லி முடிந்த அளவிற்கு காப்பிரைட் கட்டணத்தை குறைக்க சொல்கிறேன் என உள்ளூர் தொலைகாட்சி உரிமையாளர்களுக்கு உறுதி அளித்தார்.
மேலும் தொடர்ந்து ஜுலை 5 ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று இதே போல் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அதோடு தற்பொழுது பஸ்களில் படங்கள் ஒளிபரப்புவதில்லை. ஆனால் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பஸ்களில் படங்கள் போட இருக்கிறார்கள். இதற்காக ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அந்தக் குழு 3000 தனியார் பஸ் உரிமையாளர்களை சந்தித்து ஒப்பந்தம் அடிப்படையில் பேசி இருக்கிறார்கள். அதன்மூலமாக புதுப் படங்கள் வந்த உடனே ஆன்லைன் மூலமாகவும் பஸ்களிலும் அந்த படங்கள் ஒளிபரப்பாகிவிடும். இந்த சிஸ்டம் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். முதல் படமாக இரும்புத்திரை வெளியாக உள்ளது. இது எல்லாமே நலிவடைந்த தயாரிப்பாளர்களின் நலனுக்காகத்தான் இப்படி ஒரு முறை கொண்டு வர இருக்கிறோம். என்று கூறினார்.