திருச்சியில் கடந்த (21.11.21) ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. பூமிநாதன் ஆடு திருடர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட பூமிநாதனின் வீட்டிற்கு இன்று (23.11.2021) காலை சென்ற தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, அவரது படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி கவிதா, மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி சரவண சுந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எஸ்.பி. சுஜித் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, “நூறு சதவீத ஆதாரத்தின் அடிப்படையில்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு திருடிச் சென்றவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களுடன் பூமிநாதன் கனிவுடன் நடந்துகொண்டார். அவர்களை எச்சரிக்கும் நோக்கில் முக்கிய குற்றவாளியின் வீட்டிற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அந்த நேரத்தில்தான் கொலை செய்துள்ளனர். காவல்துறையினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆயுதப் பிரயோகம் பண்ணலாம் என சட்டம் சொல்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியைப் பயன்படுத்த தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறேன். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தற்காப்புடன் செயல்படவும், துப்பாக்கி எடுத்துச் செல்லவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.