Skip to main content

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய துணை ஆட்சியர்! 

Published on 31/03/2022 | Edited on 31/03/2022

 

Deputy Collector trapped in bribery department!

 

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இவரது தலைமையிலான டீம் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வனத்துறை, வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை, டாஸ்மாக் அலுவலகம் என அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் அலுவலர்களையும் லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக பிடித்து கைது செய்து வருகிறார்கள். 


இதனால் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர். எந்த நேரத்தில் எப்போது நமது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை வருமோ என்று இரவு பகல் தூக்கம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்தநிலையில், நேற்று காலை தேவநாதன் டீமுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நேற்று மதியம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சியில் இருந்து அந்த மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலத்துறையின் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் 52 வயது சரவணகுமார், அவருக்கு சொந்தமான காரில் மணி என்பவர் காரை ஓட்ட சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவரது காரை மடக்கி சோதனை செய்தனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார். 


அந்த காரின் இருக்கையின் அருகில் ஒரு பெரிய பை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் மொத்தம் 40 லட்சம் அதில் இருந்துள்ளது. உடனடியாக சரவணகுமாரையும் அந்தக் காரையும் விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்ற ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான டீம் கிடிக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். 


அப்போது பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது தேர்தலுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளில் பணிபுரிய 750 சமையலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதில் தகுதி இல்லாத பலருக்கு பணிகள் வழங்கப்பட்டதாகவும் ஒரு பணியிடத்திற்கு சுமார் 7 லட்சம் வரை லஞ்சமாக பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மட்டும் 135 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் தகுதியில்லாத பலரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான பல புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்ளன. அதன் காரணமாக தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்யுமாறு உயரதிகாரிகள் சரவணகுமாருக்கு உத்தரவிட்டுள்ளனர். அது சம்பந்தமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 


இந்த நிலையில், பிப்ரவரி மாதம் அதே மாவட்டத்தில் ஓய்வுபெற்ற மற்றும் இறந்துபோனவர்களுக்கான பனிரெண்டு காலி பணியிடங்களுக்கு பல லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு அந்த இடங்களையும் சரவணகுமார் நிரப்பியுள்ளார். இதுகுறித்து ஆணையரிடம் ஏகப்பட்ட புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால், கடந்த ஒருமாதமாக சரவணகுமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கடந்த 25ஆம் தேதி சரவணகுமாரை சஸ்பெண்ட் செய்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நல தாசில்தார் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சரவணகுமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 


இந்த பணம் 40 லட்சத்தை சென்னை ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் கலை மோகனுக்கு லஞ்சமாகக் கொடுத்து அவர் மூலம் அதிகாரிகளை சரி கட்டுவதற்காக பணம் எடுத்துச் சென்றதாக சரவணகுமார் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. சுமார் 3 மணி நேரம் சரவணகுமார் கார் டிரைவர் மணி இருவரிடமும் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 40 லட்சம் பணத்தை விழுப்புரம் மாவட்ட அரசு கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்