அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வருகிற 26- ஆம் தேதி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து புறப்படுகிறது மகாத்மா காந்தி ரதயாத்திரை. இந்த ரதயாத்திரை நெல்லை, விருதுநகர், மற்றும் குமரி மாவட்டங்களில் பயணிக்க உள்ளது. காந்தியடிகளின் 150- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ரத யாத்திரைக்கு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடையே மற்றும் இளைய சமுதாயம் மத்தியில் காந்திய கொள்கைகளைக் கொண்டு செல்லுதல், பூரண மதுவிலக்கு, காந்தியடிகளின் தியாகத்தைப் புரிய வைத்தல் போன்ற நோக்கங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்காக இந்த ரதயாத்திரை நடத்தப்படுகிறது.
செங்கோட்டையில் 26ம் தேதி காந்தி சிலையிலிருந்து கிளம்பும் ரதயாத்திரையானது இலஞ்சி, குற்றாலம், தென்காசி, கடையநல்லூர் புளியங்குடி, வழியாக ராஜபாளையம் செல்கிறது. 27ம் தேதி ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கல்லுப்பட்டி, திருமங்கலம், பின்பு 28ம் தேதி அருப்புக்கோட்டை, பின்பு சாத்தூர் வழி. 29ம் தேதி சங்கரன்கோவில், பாவூர்சந்திரம் வி.கே.புரம் 30ம் தேதி அம்பையிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் கன்னியாகுமரி 01ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு நெல்லை வந்தடைகிறது.

ரதயாத்திரையின் போது ஒரு லட்சம் காந்திய கொள்கைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரதம் முழுக்க காந்தியின் கொள்கைகள் அலங்கரிக்கப்பட்டு ரதத்தின் முன்பு காந்தியின் உருவ சிலை நிறுவப்படுகிறது. காந்திய பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்படும். குறிப்பாக இந்த ரதம் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படுகிற பகுதிகளின் வழியாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதாக இகில இந்திய காந்தி இயக்கத்தின் தலைவரான செங்கோட்டை விவேகானந்தன் தெரிவித்தார்.
சுழல்கிற தற்போதைய காலச் சக்கரத்தின் நடுவே, சுழலவிருக்கிற காந்தியின் ரதச் சக்கரங்கள் புதிய பார்வையை ஏற்படுத்தும்.