வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலுக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வீரமணி மற்றும் நீலோபர்கபீல் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் ஆலங்காயம், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, உதயேந்திரம் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நீலோபர் கபீல், உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் நிர்வாகிகள் ஒவ்வொரு வார்டு வார்டாக சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டங்களை தொடர்ந்து அதிமுக அரசு செயல்படுத்தி வருவதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும். இஸ்லாமிய மக்கள் அதிமுகவுக்கு எதிரி என்பது போல் காட்டுகிறார்கள். அதிமுக அரசு என்றென்றும் இஸ்லாமிய மக்களுக்கான அரசு என்பதை மக்களிடம் விளக்கமாக சொல்ல வேண்டும்.
வேலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான வீரமணி பேசும்போது, முதல்வரும், துணை முதல்வரும் இணைந்து கட்சியை வலுப்படுத்தி விட்டனர். இதற்குமேல் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஸ்டாலின் அறிந்து கொண்டார். வருகின்ற உள்ளாட்சி தேர்தல் உட்பட எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றி பெறுவது அதிமுகதான் என்பது மக்களுக்கும் தெரியும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். அதனால்தான் அவர் பயந்து போய் இப்போதே அவருடைய மகனை அரசியலுக்கு கொண்டு வந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். நடந்து முடிந்த பாராளமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் நாம் சில தவறுகளை செய்துள்ளோம். தவறுகள் நடந்ததை மறந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அனதை்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.