சேலத்தில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி நள்ளிரவில் சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அரவிந்த் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து கொச்சின் செல்வதற்காக தனியார் ஆம்னி பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற பேருந்து, குரங்குசாவடி அருகே சாலையோரம் பழுதாகி நிறுத்தப்பட்டிருந்த ஒரு வேன் மீது மோதி, சாலையின் தடுப்புச்சுவர்களை உடைத்துக்கொண்டு எதிர்ப்புறம் உள்ள சாலையில் நின்றது. இந்தப் பேருந்து மீது பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து பலமாக மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 7 பேர் பலியாகினர். பெற்றோர் உள்பட ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்த இரண்டரை வயது சிறுவன் ஈத்தன் மட்டும் காயமின்றி உயிர் தப்பினான். முதலில் அந்தக் குழந்தை அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தையின் சித்தியிடம் ஈத்தன் ஒப்படைக்கப்பட்டான்.
சம்பவ இடத்தில் சாலையோரம் பழுதாகி நின்ற வேனின் இண்டிகேட்டர்கள் எரியவிடப்பட்டு இருந்ததும், கிருஷ்ணகிரி நோக்கிச்சென்ற தனியார் பேருந்துதான் கவனக்குறைவாக மோதி விபத்தை ஏற்படுத்தியதும் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விபத்தில் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனியார் பேருந்து ஓட்டுநர் தனசேகரன் மீது சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.