தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாயும் பொங்கல் பொருட்களும் வழங்கப்படும் என எடப்பாடி அரசு அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அதிமுக நிர்வாகிகள் ரேஷன் கடை முன்பு நின்று கொண்டு அலப்பறை கொடுத்து வருகின்றனர். இதில் சில முன்னாள் அதிமுக கவுன்சிலர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பில்டப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆளும் கட்சியினர் நின்று ரேஷன் கார்டு ஜெராக்ஸ்சை வாங்கி பணம் வாங்கி கொடுத்து விட்டு எம்.பி.தேர்தலுக்காக தான் முதல்வரும், துணைமுதல்வரும் அட்வான்ஸ்சாக ஆயிரம் ரூபாயை பொங்கல் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். இதை எல்லாம் மனதில் வைத்து எம்பி தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க மறக்காதீர்கள்.
தேர்தல் சமயத்தில் இதைவிட பலமடங்கு உங்களுக்கு பணம் கொடுக்க இருக்கிறோம் என்று கூறி ரேஷன் கடைக்கு வரும் மக்களை ஆளும் கட்சியினர் இப்போது தேர்தலுக்காக கவர் செய்து வருகிறார்கள். இது போல் வத்தலகுண்டு காந்திநகர் முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி தனது ஆதரவாளர்களுடன் சென்று பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதும் தனக்கு வேண்டியவர்களுக்கு உடனடியாக பணம் வாங்கித் தருவதும், சந்தடி சாக்கில் வரும் தேர்தலில் தனக்கு வாக்களிக்க வேண்டுமென ஓட்டு கேட்பது என அலப்பறை கொடுத்து வருகிறார். இதை கண்ட பொதுமக்கள் அரசாங்க பணத்தை எடுத்துக்கொண்டு அதிமுகவினர் தங்களுக்கு ஓட்டு கேட்பதா என முனு முனுத்தும் வருகிறார்கள். இருந்தாலும் மாவட்ட அளவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆளுங்கட்சியினர் நின்றுகொண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வாங்க வரும் பொதுமக்களிடம் எங்களை மறந்து விடாதீர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி இப்பொழுதே தேர்தலுக்காக அடிபோட்டு வருவதையும் பார்க்க முடிந்தது.