வேட்பாளர் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட தடைக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
வேட்பாளர் படிவத்தில் ஒவ்வொரு கட்சியிலும் அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் கையெழுத்திடுவார்கள். அந்தவகையில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி அதிகாரப்பூர்வமாக இல்லை. அதனால் வேட்பாளர் படிவத்தில் இவர்கள் கையெழுத்திட தடைவிதிக்க வேண்டுமென்று அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26-ம் தேதியே கடைசி நாள் என்பதால், 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தும் எந்த பயனும் இல்லை எனவும், உடனடியாக மனுவை விசாரிக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.