படிப்பதற்காகத்தானே பள்ளி செல்கிறார்கள் மாணவர்கள்? வன்முறையில் ஈடுபட்டு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகும் நிலைக்கு ஏன் ஆளாகிறார்கள்?
சிவகாசி தாலுகா – நடையனேரியில் அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. 14 வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாய் மகாலட்சுமியுடன் சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் அவன். நடையனேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் படிக்கும் குமாரும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிருபாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வகுப்பறையில் சண்டை போட்டுள்ளனர். ஆசிரியரும் கண்டித்திருக்கிறார். அன்று மாலை மணியும் குமாரும் பள்ளியின் பின்பக்கம் உள்ள மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, அவர்களுடன் படிக்கும் பாண்டி என்ற மாணவன் குமாரிடம் “எதுக்கு கிருபாகூட சண்டைக்கு வந்த?” என்று கெட்ட வார்த்தையால் திட்டி மல்லுக்கு நிற்க, மணி சண்டையை விலக்கி விட்டிருக்கிறான்.
உடனே, அங்குக் கிடந்த கம்பை எடுத்த பாண்டி, மணியை காதோரம் அடித்திருக்கிறான். மணி அந்த இடத்திலேயே மயங்கி விழ, அம்மா மகாலட்சுமிக்கு தகவல் போனது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணி சேர்க்கப்பட்ட நிலையில், மாணவன் பாண்டி மீது எம்.புதுப்பட்டி காவல்நிலையத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியிருக்கிறது.