வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.