நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.8.2023) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு வரும்போது, அவர்களை காவலர்கள் நடத்துகின்ற விதத்தை பொறுத்துத்தான் காவல்துறையின் பிம்பம் கட்டமைக்கப்படும். அதை உணர்ந்து பொறுப்புடனும், கனிவுடனும் காவலர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதற்காகத்தான் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், வரவேற்பாளர்களை நியமித்திருக்கிறோம். அவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதை எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் உறுதி செய்யவேண்டும். முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சரியான தீர்வு காணப்படவேண்டும்.
பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையோடு எனக்கு மனுக்களை அனுப்புகிறார்கள். எனவே, சட்டப்படி மேல்நடவடிக்கை எடுத்து, அந்த விவரங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவேண்டும். இது பற்றி நானே மனுதாரர்களிடம் பேசித் தெரிந்துகொள்ளப் போகிறேன். காவல்துறையினரால் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள இருக்கிறேன். அதனால், ஒவ்வொரு மனு மீதும், சரியான விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தவேண்டும் என்று நான் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தேன். சில மாவட்டங்களில், காவல் கண்காணிப்பாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இப்படியான புகாருக்கு இடமில்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். காவலர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிக்கவேண்டும். அப்போதுதான் அவர்களால் சிறப்பாக பணி செய்ய முடியும்.
அடுத்து வரும் சில மாதங்கள் நமக்கு மிகவும் முக்கியமானவை. அடுத்த வாரம் வேளாங்கண்ணி கொடியேற்றம் நடக்கப் போகிறது. அங்கு வரும் பக்தர்கள் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஏதுவாக, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கையாண்டு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல், கண்காணிக்கவேண்டும். அடுத்த மாதம், பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை நிறுவும் இடங்கள், சிலை ஊர்வலங்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி பிரச்சனை ஏற்படாமல் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். காவல்துறை மிக முக்கியமான துறை. உங்கள் செயல்பாடுதான் அரசுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். அதனால் உயர் அதிகாரியிலிருந்து கடைநிலைக் காவலர் வரை ஒருங்கிணைந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.