கோவை வ.உ.சி மைதானத்தில் கோவை மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுக்கால வரலாற்று புகைப்படக் கண்காட்சி இன்று துவங்கி வரும் 14 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
இக்கண்காட்சியை நடிகர் சத்யராஜ் துவக்கிவைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த வருகைப் பதிவில் தனது கருத்தையும் பதிவு செய்தார். அதில் வரலாற்று நாயகனை பற்றிய வரலாற்றை அறிந்து பெருமிதத்தோடு மகிழ்ந்தேன். வாழ்க திராவிட மாடல். மாண்புமிகு முதல்வருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் புகைப்படக் கண்காட்சியை ஆரம்பித்தும் மதுரையில் ஆரம்பித்தும் அழைத்தார்கள். போக முடியவில்லை. அமைச்சர் செந்தில்பாலாஜி அழைத்தவுடன் வரும்படியான சூழல் ஆகிவிட்டது. புகைப்படக் கண்காட்சி மிகச்சிறப்பாக இருந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்ததில் இருந்து அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்துள்ளார்கள். அவர் பட்ட கஷ்டங்கள், திமுகவிற்காக அவரது உழைப்புகள் அனைத்தையும் மிகச்சிறப்பாக பதிவு செய்துள்ளார்கள். மிசாவில் அவர் கைதாகவில்லை என சொல்லுவார்கள். அதற்கான சாட்சியாக எஃப்ஐஆர் உடன் வைத்துள்ளார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் கலைஞர் போல் வேடமணிந்து ஒரு பிரச்சார நாடகத்தில் நடிக்கிறார். அதை எம்ஜிஆர் தலைமை தாங்கி முதல்வரை பாராட்டும் படியான புகைப்படம் ஒன்று இருந்தது. வரலாற்றை தெரிந்துகொள்ளும் போதுதான் சித்தாந்தத்தை நோக்கிய தெளிவு ஏற்படும்” எனக் கூறினார்.