![Decision to expand the limits of Erode Corporation](http://image.nakkheeran.in/cdn/farfuture/WRbJJ0toSg_FGpdKVKpq8zdZBMq6d1buZwpXsJEuwIU/1705811819/sites/default/files/inline-images/th-1_4558.jpg)
ஈரோடு, நகராட்சியாக இருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது நகராட்சி எல்லை 8.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவாக இருந்தது. பின்னர் 2010-ம் ஆண்டு மாநகராட்சி பகுதியை ஒட்டி இருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம் ஆகிய நகராட்சிகளையும், பி.பி. அக்ரகாரம், சூரியம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளையும், தாராபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல், முத்தம்பாளையம், 46 புதூர், லக்காபுரம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் லக்காபுரம் மற்றும் 46 புதூர் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றாததால் இந்த 2 ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் 109.52 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சியின் வருவாயை அதிகப்படுத்தவும், மாநகரப் பகுதியில் இட நெருக்கடி நிலவுவதாலும் மாநகராட்சியின் எல்லை பகுதியை மேலும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டி உள்ள சித்தோடு பேரூராட்சி, மேட்டு நாசுவம்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளை ஈரோடு மாநகராட்சியோடு இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் சோலார் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் லக்காபுரம், 46 புதூர் ஆகிய ஊராட்சிகளையும் மாநகராட்சியோடு இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில் மாநகராட்சியின் பரப்பளவு 140 சதுர கிலோமீட்டர் ஆக உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.