பணபலமும், சமூக அந்தஸ்தும் உள்ள ஒரு தந்தையால், திருமணமாகி குழந்தைகளும் உள்ள தன் மகளின் கள்ளக்காதலை ஜீரணிக்க முடியவில்லை. தன் நிம்மதியைக் கெடுத்த அந்தக் கள்ளக்காதலனை, கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்துவிட்டார்.
மகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று எண்ணாமல், பாசத்துக்காகக் கொலைகாரனான அந்தத் தந்தையின் பெயர் சூரியநாராயணன். ஐதராபாத்தைச் சேர்ந்த இந்த தொழில் அதிபருக்கு கொடைக்கானலில் சொகுசு பங்களா மற்றும் தோட்டம் உள்ளன. இவருடைய மகள் விஷ்ணுபிரியா நடிகையும் கூட. மாயாவி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான இவர், கொடைக்கானல் பங்களாவையும், தோட்டத்தையும் பார்வையிட அவ்வப்போது கொடைக்கானல் வந்து செல்வார். அப்போது, மதுரை விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில்தான் கொடைக்கானல் வருவார். அதுவும் கொடைக்கானலைச் சேர்ந்த பிரபாகரனின் காரையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.
பிரபாகரன்
காரில் வரும்போது பேசிப் பழகியது, கள்ளக்காதலில் கொண்டுபோய் விட்டது. உடலும் மனமும் போட்டிபோட்டுக்கொண்டு வெறித்தனமாகக் காதலித்ததால், பிரபாகரனுக்கு ரூ.15 லட்சத்துக்கு கார் வாங்கிக்கொடுத்தார் விஷ்ணுபிரியா. பிரபாகரனை மறுமணம் செய்துகொள்ளப் போவதாக, அப்பா சூரியநாரயணனிடம் அடம் பிடித்தார்.
சூரியநாராயணன்
தந்தைக்குத் தூக்கம் தொலைந்து போனது. இத்தனை செல்வாக்கோடு வாழ்ந்து வரும் தனக்கு ஒரு கார் டிரைவரால் நிம்மதி பறிபோனது ஆத்திரத்தை உண்டுபண்ணியது. இனியும் பிரபாகரன் உயிர்வாழக்கூடாது என்று முடிவு செய்தார். கொடைக்கானலைச் சேர்ந்த இன்னொரு டிரைவர் செந்தில்குமாரிடம் ரூ.3.5 லட்சம் என்று ரேட் பேசி, ரூ.50000-ஐ அட்வான்ஸாகக் கொடுத்தார்.
செந்தில்குமார்
இதனைத்தொடர்ந்து, தன் நண்பர்கள் மணிகண்டன், முகம்மது சல்மான், முகமது இர்பான் ஆகியோரோடு சேர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை பிரபாகரனைக் கொலை செய்து, பள்ளத்தாக்கில் சடலத்தை வீசினார் செந்தில்குமார்.
பிரபாகரனின் கார் கொடைக்கானல் உகார்தே பகுதியில், கடந்த 24-ம் தேதி, அங்கங்கே ரத்தச் சிதறல்களோடு அனாதையாக நின்றது. பொதுமக்கள் காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி, கொலையாளிகளைத் தேடியது போலீஸ். தொடர்ந்து பிரபாகரனை செல்போனில் தொடர்புகொண்டும், அவர் எடுக்கவில்லை. அந்த நேரத்தில், சூர்யா நடித்த சிங்கம் படத்தில் வரும் ஒரு காட்சி நினைவுக்குவர, பிரபாகரனின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கின்றனர். அந்த மெசேஜ் ரீச் ஆனவுடன், செல்போன் இருந்த ஏரியா செண்பகனூர் என்பதைக் காட்டிக்கொடுத்தது சிக்னல். உடனே, அந்த ஏரியாவுக்கு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தி, பிரபாகரனின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
முகம்மது இர்பான்
24 மணி நேரத்தில் துப்புத் துலக்கி, கூலிப்படையினரை வளைத்துப் பிடித்து, போலீசாரின் விசாரணையில், செந்தில்குமார் உள்ளிட்ட கூலிப்படையினர், காரில் வைத்துப் பிரபாகரனைக் கொலை செய்துவிட்டு, 8 கி.மீ. தூரம் தள்ளியுள்ள செண்பகனூர் பள்ளத்தாக்குப் பகுதியில் பிணத்தை எறிந்ததை ஒப்புக்கொண்டனர். கூலிப்படையினரில் முகமது சல்மானும் முகமது இர்பானும் சகோதரர்கள். கறிக்கடை நடத்துபவர்கள். இவ்விருவரும்தான், பிரபாகரனை வெட்டியிருக்கின்றனர். கூலிப்படையினர் அனைவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகிவிட்ட தொழிலதிபர் சூரியநாராயணனைத் தேடி வருகிறார்கள் காக்கிகள்.
முகம்மது சல்மான்
பிரபாகரனிடம் கள்ளக்காதல் வலையை விரித்த மகள் விஷ்ணுபிரியாவை, பாசத்தின் காரணமாக தந்தை சூரியநாராயணன் எதுவும் செய்யவில்லை. பிரபாகாரன் சாதாரண டிரைவர்தானே என்ற வர்க்க சிந்தனையோடு, அவர் உயிரைப் பறித்திருக்கிறார் சூரியநாராயணன்.