Skip to main content

மீனவர் வாழ்வுரிமையை பலிகொடுக்கும் எடப்பாடி அரசு-வைகோ கண்டனம்

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
vaiko

 

தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழித்தும், மீனவர் வாழ்வுரிமையை முற்றும் முழுதாகப் பலி கொடுக்கின்ற பச்சைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்து வருவது கண்டனத்துக்குரியது என மறுமலர்ச்சி தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

"கடலோர ஒழுங்குமுறை மண்டலச் சட்டம் 1991 இல் கொண்டு வரப்பட்டு, இருபது ஆண்டுகள் கழித்துத்தான், 2011 ஆம் ஆண்டு முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் கடலோரப் பகுதிகளின் மீது கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதாக இருந்தது. குறிப்பாக, கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று விதிகள் கூறுகின்றன. புதிய தொழிற்சாலைகள் தொடங்குவது, துறைமுகம் அமைப்பது, நிலம் வாங்குவது, விற்பது, மீன் பதப்படுத்தும் தொழில் உள்ளிட்ட பல தொழில்களுக்கும் தடை விதித்தது. துறைமுகம், சுற்றுலா மேம்பாடு, புதிய கட்டுமானங்கள் கட்டுவதற்கும் கடுமையான விதிகளை அறிமுகம் செய்தன.

 

இந்நிலையில், 2014 இல் சைலேஷ் நாயக் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு இச்சிக்கல்களைத் தீர்க்க 110 பக்க அறிக்கையை மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம்  2015 இல் அளித்தது. இக்குழுவின் பரிந்துரைகளில், ‘கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் பல விதிமுறைகளை மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும்;  சூழலியல் சுற்றுலா, பொதுமக்கள் பயன்பாடு சார்ந்த உள் கட்டமைப்புத் திட்டங்கள், துறைமுகங்கள் மறறும் பாதுகாப்புச் சார்ந்த கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்தப் பரிந்துரைகளுக்கு, மீனவ மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சி அரசு, உருவாக்கி உள்ள ‘சாகர்மாலா’ திட்டத்தைச் செயல்படுத்தவே கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை 2011, சட்டத்தில் விதிமுறைகளை மாற்றி, புதிய கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி இருக்கின்றது. மத்திய அரசு, கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் வரைவு அறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்துக் கேட்டுள்ளது. மேலும் சுற்றுச் சூழல் துறையின் இணைய தளத்திலும் வெளியிட்டு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கூறியது.

 

மாற்றம் செய்யப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கடலோர மேலாண்மைத் திட்டத்தின் மீது, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் தமிழக சுற்றுச் சூழல் துறையின் சார்பில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. பெயரளவுக்கு நடத்தப்பட்ட இக்கூட்டங்களில் தமிழக மீனவர்களும், பொதுமக்களும், கடலோர மேலாண்மைத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இந்நிலையில்தான், தமிழக சுற்றுச் சூழல் துறையின் சார்பில், கடலோர மேலாண்மைத் திடடத்திற்கு ஆதரவாக மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை மற்றும் பருவ கால நிலை மாற்றத் துறை அமைச்சகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

 

மத்திய சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் பருவகால நிலை மாற்றத் துறை நடத்திய 35 ஆவது தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை அளிக்கப்பட்டு இருக்கின்றது. அதில், இனி மத்திய அரசு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகள் போன்ற மத்திய அரசின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு ஆணை 2006 ன் படி மக்களிடம் கருத்துக் கேட்கும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், பாறைப் படிம எரிவாயு திட்டங்கள் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளிட்ட பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலத் திட்டங்கள், குழாய் பதித்து எரிவாயு கொண்டு செல்லும் திட்டங்கள், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் போன்றவற்றிற்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தத் தேவை இல்லை என்பதை, மத்திய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை பருவகால மாற்றத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை அழித்து, முற்றும்முழுதாகப் பலி கொடுக்கின்ற  பச்சைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்து இருப்பதைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

ஜனநாயக நாட்டில் மக்களின் பங்கேற்பும், அனுமதியும் இல்லாத எந்தத் திட்டங்களையும் வலிந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்றால், எரிமலையென மக்கள் கிளர்ந்து எழுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என எச்சரிக்கின்றேன்." என்கிறது அந்த அறிக்கை.
 

சார்ந்த செய்திகள்