உசிலம்பட்டியின் 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சியினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் 58 ஆம் கிராம கால்வாயில் நீர் திறக்க கோரியும், நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக சங்கத்தினர் இன்று உசிலம்பட்டியில் 3000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ ஸ்டாண்ட் சங்கத்தினர் ஆட்டோகள் ஓடாது என அறிவித்து போராட்டத்தில் களமிறங்கினர்.
மேலும் உசிலம்பட்டி தேவர்சிலை முன்பு ஒன்றிணைந்த விவசாயிகள் மற்றும் வர்த்தக சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக நிரந்தர அரசாணை வழங்கி 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் மேலும் பலகட்ட போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.