கடந்த ஜனவரி மாதம் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி – ஆந்திரா எல்லையோர கிராமங்களில் சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருந்தது. இந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள ஆடு, மாடு போன்றவற்றை அடித்து காயப்படுத்தியது. 50க்கும் அதிகமான ஆடுகள், சில மாடுகள் பலியாகி, சிறுத்தைக்கு உணவாகின. இந்த சிறுத்தையினால் சில விவசாயிகளும் காயமடைந்தனர்.
இதனை பிடிக்க வேண்டும்மென வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் வேண்டுக்கோள் விடுத்தனர். பல கட்ட வேண்டுகோளுக்கு பின்பு சிறுத்தையை பிடிக்க சில இடங்களில் கூண்டு வைத்தனர். தனக்கு வலை விரித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த சிறுத்தை, சிக்காமல் எஸ்கேப்பானது. இதனால் சில நாட்களுக்கு பின்பு கூண்டை அகற்றிவிட்டனர்.
கடந்த 20 நாட்களாக அமைதியாக இருந்த அந்த ஒற்றை சிறுத்தை மீண்டும் தனது வேலையை காட்டத்துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் மக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தமுறை வாணியம்பாடிக்கு பதில் ஆம்பூர் பகுதியில் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது. ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் என்கிற கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரின் பசுமாடு, மார்ச் 3ந் தேதி தேதி தனது வயலில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். இன்று மார்ச் 4ந் தேதி காலை போய் பார்த்தபோது, பசுமாடு குடல் வெளியே தள்ளி இறந்துப்போயிருந்தது. சிறுத்தை தாக்கியதற்கான அடையாம்மிருந்ததால் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வழக்கம் போல் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை சுணக்கம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் சிறுத்தையால் அச்சத்தில் வாழ்கின்றனர்.