தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஜூலை 5-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி தொற்று அதிகம் உள்ள வகை ஒன்றில் இடம் பெற்றிருந்த 11 மாவட்டங்களில் (கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிகல் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி. ஹார்ட்வேர் கடைகள் 9 மணி முதல் 7 மணி வரை திறக்கலாம். கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் அங்காடி காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க அனுமதி. அதேபோல் காலணி விற்பனை கடைகள். வாகனங்களை பழுது பார்ப்பதற்காக மையங்கள் காலை 9 மணி முதல் 7 மணி வரை திறக்க அனுமதி. கணிப்பொறி மென்பொருள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் காலை 9 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இயங்கும். சலூன்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். திறந்தவெளியில் திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி. படப்பிடிப்புக்கு 100 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் அவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பின் பங்கேற்கலாம். திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகளை மேற்கொள்ள அனுமதி. வட்டாட்சியரின் அனுமதிபெற்று திரையரங்குகளில் வாரம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி. பூங்காவில் காலை 6 முதல் 9 மணி வரை நடைப்பயிற்சிக்கு மட்டும் அனுமதி. பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம். தகவல் தொழில்நுட்பம்/சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
வகை இரண்டில் உள்ள 23 மாவட்டங்களில் (அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்) கடைகள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வகை மூன்றில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜவுளி கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்களில் 100 சதவீத பணியாளர்களுக்கு அனுமதி. அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி. அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை. நான்கு மாவட்டங்களில் உள்ள வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க அனுமதி. தியேட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபயிற்சிக்காக காலை 5 மணி முதல் 9 மணி வரை அனைத்து கடற்கரைகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.