10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனம் அளிக்கும் சந்திரன் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு; நெற்பயிர்கள் கருகும் நிலையில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து 3 நாட்களாக 7 கி.மீ வரை பாசன வாய்க்காலை சொந்த செலவில் தூர்வாரி வரும் அவல நிலை.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. இவைகளில் திறக்கப்படும் தண்ணீரைதான் அப்பகுதி விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு பாய்ச்சி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிலிருந்து வரும் சந்திரன் வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் தூர் வாராத காரணத்தினால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர். இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,தற்போது நேரடி நெல் விதைப்பு செய்ய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வரும் நிலையில் விவசாயிகள் நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக ஒன்று சேர்ந்து சந்திரன் வாய்க்காலை 7 கிலோ மீட்டர் வரை தங்களின் சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர்.
தற்போது கடைமடை பகுதியான கூடுவெளிச்சாவடி, கொடியாளம், முகையூர்,பெருங்காலூர், சிதம்பரம், ஆகிய கடைமடை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மூன்று நாட்களாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தூர்வாரும் பணி முடிந்தால்தான் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பொதுப்பணித் துறையினர் உடனடியாக இந்த சந்திரன் வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வாரி தர வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.