அரசு ஊழியர்களின் பிரச்சனைகளைக் களைய தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர்குழு ஒரு ஏமாற்று வேலை. ஆட்சி முடியும் வரை காலம் கடத்தும் வேலையை செய்கின்றனர் என்கிறார் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம்,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று நாடு முழுவதும் நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஊதியம் பிடித்ததுடன் வேறு பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து வரும் நவம்பர் 27ம் தேதி முதல் நடைபெறவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி வரும் 13ம் தேதி சேலத்தில் ஆயத்த மாநாடு நடைபெறவுள்ளது.
காலவரையற்ற போராட்டத்தினால் அரசே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் மேலும் ஒரு நபர் குழுக்கள் நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்ந்து காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆட்சி காலம் முடியும் வரையில் இது போன்று கால நீட்டிப்பு செய்து ஆட்சி விட்டு போய் விடலாம் என நினைத்து வருகின்றனர்." என்றார்.