சென்னையிலிருந்து மன்னார்குடி வந்த அரசு விரைவு பேருந்தில் பயணித்த பெண் மருத்துவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட செய்த நடத்துனரை கும்பகோணம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
என்ன நடந்தது காவல்துறையில் விசாரித்தோம், " சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜெயசீலன் மகள் தமிழ்ச்செல்வி 28 வயதான இவர் சித்தா டாக்டராக இருக்கிறார். அப்பகுதியில் உள்ள வள்ளலார் மன்றத்தில் இணைந்து சமூக சேவைகளும் செய்து வருகிறார். வள்ளலார் மன்றத்திற்கு தீபம் வாங்க நேற்று இரவு கோயம்பேட்டில் இருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவு பேருந்தில் வந்திருக்கிறார். இருவர் இருக்கக்கூடிய சீட்டில் அமர்ந்து இருந்த தமிழ்செல்வி அசதியால் அயர்ந்து தூங்கிவிட்டார். இதனை கண்ட கண்டக்டர் ராஜீவ் (32) தமிழ்ச்செல்வி அருகில் வேற யாரையும் கண்டக்டர் உட்கார விடவில்லை. பேருந்து வேகமாக செல்லத்துவங்கியது. அந்த சீட்டில் கண்டக்டர் ராஜ்வ் அமர்ந்து, செல்வியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார், சில்மிஷம் ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போனதால் கோபமான செல்வி எழுந்து சத்தம் போட்டிருக்கிறார்.
பயத்துபோன நடத்துனர் ராஜீவ் மேல்மருவத்தூர் அருகே பஸ் வந்தவுடன் டிரைவர் கணேசமூர்த்தியை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு பஸ்சை ஓட்டிக்கொண்டு வந்தார். பேருந்தை சாப்பாடு, டீ சாப்பிடுவதற்காக கூட இடையில் எங்கும் நிறுத்தவில்லை. பயணிகள் ஏன் இடையில் நிறுத்தவில்லை என கேட்டதற்கு, ரொம்ப நேரமாகிவிட்டது என்று பொய்யான காரணத்தைச சொல்லி பேருந்தை மிக விரைவாக கொண்டு வந்துவிட்டனர்.
இந்த நிலையில் காலை பஸ் கும்பகோணம் வந்ததும் பஸ்ஸில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி வேகமாக ஓடி அங்குள்ள காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை புகாராக கூறினார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு டிரைவர், கண்டக்டர்கள், காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள், "இந்த பிரச்சனையை இங்கே பேசி முடித்துக்கொள்ளலாம், கண்டக்டர் ராஜிவை மன்னிப்பு கேட்க வைக்கிறோம்," என்று டிரைவர் கண்டக்டர்கள் மன்றாடினர். அதன்படி தமிழ்செல்வி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் நடத்துனர். ஆனாலும் மனம் மாறாத செல்வி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை புகாராக எழுதி அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கண்டக்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றோம். ஏற்கனவே ராஜீவ் ராமநாதபுரத்தில் இருந்த போது அங்குள்ள பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கும்பகோணம் அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இங்கு வந்தும் திருந்தாமல் அதே வேலையில் இருந்துள்ளார்," என்று கூறுகின்றனர்.
இது குறித்து கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் சேகர் கூறுகையில்," பிரச்சனை எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது, இது சம்மந்தமா எங்கள் தரப்பிலும் விசாரிக்கப்படும், அதில் உண்மை இருந்தால் மீது துறை ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்." என்கிறார்.
சமுக ஆர்வளர் ஒருவர்கூறுகையில்," ஒரு பெண் எப்பொழுதும் நிறைய நகைகளை உடம்பு முழுவதும் போட்டுக்கொண்டு நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியில் போய்விட்டு பாதுகாப்போடு வீடு திரும்புகிறாரோ அன்றுதான் இந்தியா முழு சுதந்திரம் அடைந்திருப்பதாக நான் ஒப்புக்கொள்வேன் என்றார் மகாத்மா காந்தி. அது இன்றுவரை நடக்கவில்லை. அவர் பிறந்த நாளில் அரசுப் பேருந்தில் ஒரு டாக்டருக்கு இந்த நிலைமை என்றால் நாடு எங்கே போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. காந்தியின் கருத்தை இப்பொழுது யார் பேசினாலும், கேட்டாலும் முதலில் சிரிப்புதான் வருகிறது. அட போங்கப்பா நகை எதுவுமே போடாமல், முழுமையாக உடை அணிந்து பட்டப்பகலில் தந்தையுடனோ, உடன்பிறப்புகளுடனோ, அல்லது தாயுடனோ தோழிகளுடனோ வெளியில் சென்றுவிட்டு ஒரு பெண்ணால் முழுமையாக வீடு திரும்ப முடிகிறாதா. ஒரு காலத்தில் ஆசிட் ஊற்றினார்கள். பிறகு இணையதளம் மூலம் கேவலப்படுத்தினார்கள். இப்பொழுது பெண்களை அறுத்து கூறு போடுகிறார்கள். இதற்குமேல் ஏதாவது செய்ய இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் பதில் கிடைக்கும்.
பெண்களின் மீது வன்முறையை ஏவி விடுவதற்காக புதுப்புது உத்திகளை கண்டுபிடிக்கும் இளைஞர் மற்றும் ஆண்கள் சமுதாயம், அதற்காக செலவு செய்யும் புத்தியை தங்களின் சுய முன்னேற்றத்திற்கு அல்லது சமுகத்தின் முன்னேற்றத்திற்கு செலவு செய்திருந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைத்திருக்கும். பேருந்து பயணம் பாதுகாப்போடு இருக்கும் என்று நினைத்துதான் வருகின்றனர், இவ்வளவு பயணிகளுக்கும் முன்பே இப்படி நடந்துகொள்வது கேவளத்தின் உச்சம்," என்றார்.