Skip to main content

போலி திருமண பேனர் வைரல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

cuddalore virudhachalam government school teachers marriage flex banner viral 

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 40 ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியை ரேகாவிற்கும் திருமணம் நடப்பதாகவும், அந்த திருமணத்திற்கு அதே பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் உட்பட 21 ஆசிரியர்கள் புகைப்படத்துடன் கொண்ட திருமண வரவேற்பு பேனர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களும் ஏற்கனவே தனித்தனியாகத் திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், ஆசிரியர்கள் இருவரையும் இணைத்து அதில் சக ஆசிரிய, ஆசிரியைகளின் படங்களைப் போட்டு வாழ்த்து பேனர் வெளியிட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் இந்தப் போலியான திருமண பேனரை உருவாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த பேனரில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் புகைப்படங்கள் அனைத்தும் பள்ளியின் ரகசிய பாதுகாப்பான விபரங்கள் அடங்கிய எமிஸ் ப்ரொஃபைல் ரெக்கார்டில் உள்ள புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்த ரகசிய பாதுகாப்பான எமிஸ் ப்ரொஃபைல் லாகின் செய்வதற்கான பாஸ்வேர்ட் தலைமை ஆசிரியருக்கும் அந்தந்த தனி நபர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும் என்பதால் இத்தனை புகைப்படம் வெளியானதற்கும், போலி பேனர் உருவாக்கியவர்கள் ஒரு பெரிய குழுவாகச் செயல்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்