இந்து மகாசபா அமைப்பின் துணைத் தலைவராக உள்ளவர் ராமநாதன். இவர் கையில் துப்பாக்கியுடன் உலா வருவதால் அப்பகுதி மக்களால் துப்பாக்கி ராமநாதன் என்ற அடைமொழியுடன் சுற்றி வந்துள்ளார். இவருக்கு செங்குன்றத்தில் உள்ள சோலை நகர் பகுதியில் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றது.
அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த புதுப்பேட்டை ஆயுதக் காவல் படையில் காவலராக பணியாற்றி வரும் வெற்றிவேல் என்ற ஆயுதப்படை காவலர் அவருடைய நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக காரில் வந்த துப்பாக்கி ராமநாதன் என் இடத்தில் நின்றுகொண்டு என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என வெற்றிவேலிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் வெற்றிவேல் தான் ஒரு போலீஸ் என அறிமுகப்படுத்திய பின்னரும் துப்பாக்கி ராமநாதனுக்கும் வெற்றிவேலுக்கும் வாக்குவாதம் முற்றியது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமநாதன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெற்றிவேலை குறிபார்த்துவிட்டு தரையை நோக்கி சுட்டுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய வெற்றிவேல் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் அங்கு சென்று துப்பாக்கி ராமநாதனை கைது செய்ததோடு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
மணிப்பூரை பூர்விகமாக கொண்ட ராமநாதன். நின்றுபேசியதற்கு மட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் சென்றபோது தன் காருக்கு முன்னே சென்ற பேருந்து வழிவிடாததற்கு ஆத்திரமடைந்து துப்பாக்கியால் பேருந்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போதே கைது செய்யப்பட அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டாலும் மீண்டும் மணிப்பூர் சென்று துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். அதேபோல் இவர் மீது செம்மரக்கடத்தல் வழக்கும் உள்ளது.
தற்போது ஆயுதப்படை காவலரை சுட முயற்சித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துப்பாக்கி ராமநாதன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.