மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை வரும் 5-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
மதுரை ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது போது "குற்ற வழக்குகளில் கைதான நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கவே நித்தியானந்தா முயற்சிப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
குறுக்கிட்ட நீதிபதி, நித்தியானந்தா தானாக வரவில்லை. அவரை நியமித்ததே தற்போதைய ஆதீனம் தான் என்றார். அதற்கு தற்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நித்தியானந்தா நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், பொதுநல மனுவாகவோ, சிவில் வழக்காகவோ தான் தாக்கல் செய்திருக்க வேண்டும். மடத்தில் முறையாக பூஜைகள் நடக்காததால் தான், பூஜைகள் நடத்த வேண்டும். அதற்கு மடத்துக்குள் செல்ல அனுமதி வேண்டும் என்றார்.
பூஜைகள் செய்ய ஓதுவார்களை நியமிக்கலாம் எனக் கூறிய நீதிபதி, சிவில் வழக்குகள் முடியும் வரை மதுரை ஆதீனத்துக்குள் நுழைய மாட்டேன் என நித்தியானந்தா கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
கோரிக்கை மனுவை பரிசீலிக்க கோரிய வழக்குக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்ற நீதிபதி, மடத்துக்குள் நுழைய உங்களுக்கு உரிமையில்லை எனவும், ஆதீனமாக நியமிப்பதற்கான மடத்தின் நிபந்தனைகள் எதையும் பூர்த்தி செய்யவில்லை என மற்றொரு வழக்கின் தீர்ப்பில் உயர் நீதிமன்ற நீதிபதி வேலுமணி தெரிவித்துள்ளார் என நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார்.
நித்தியானந்தாவின் நடவடிக்கை, நேர்மை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை எனவும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.
வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை 5ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி மகாதேவன், 2ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.