அரசு விழாக்களின் இறுதியில் ‘ஜன கன மன’ எனத் தொடங்கும் தேசிய கீதம் பாடப்படுவது வழக்கம். மொழி தெரியாவிட்டாலும் இந்த வங்கமொழிப் பாடலுக்கு அனைவரும் எழுந்து நின்று அசைவற்று மரியாதை அளிக்க வேண்டும்.
அண்ணா மறைவுக்குப் பிறகு 1969 ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் விழாவின் தொடக்கத்தில் தமிழ்த் தாய்க்கு மரியாதை அளிக்கும் வகையிலான ஒரு பாடலை தேர்வுசெய்ய விரும்பினார். அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் தமிழில் இருந்து உதித்த கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவற்றை குறிப்பிடும் வரிகளையும், ஆரிய மொழியான சமஸ்கிருதம் வழக்கொழிந்து அழிந்ததைக் குறிப்பிடும் வரிகளையும் நீக்கிவிட்டு, தமிழைச் சிறப்பித்து பாடப்பட்ட வரிகளை மட்டும் பயன்படுத்த உத்தரவிட்டார்.
தமிழ் அறியாத பிற மாநில அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும், அகில இந்தியத் தலைவர்களும் விழா தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை அளிக்க கலைஞரின் இந்த உத்தரவு வழி செய்தது.