சேலத்தில் தொடர்ந்து வழிப்பறி, அடிதடி குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி மேற்கு விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மண்டை விஜய் என்கிற விஜயகுமார் (26). கடந்த ஏப்ரல் 26ல், கொண்டப்பநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, பூபாலன் என்பவரிடம் கத்தி முனையில் அரை பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் மண்டை விஜயை கைது செய்தனர். இவர் தனது கூட்டாளிகள் பரமா என்கிற பரசுராமன், வசந்த் என்கிற வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து 26.12.2018ல் கன்னங்குறிச்சி பகுதியில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ஒரு வழக்கும், 29.1.22018ல் ஒருவரிடம் கத்தி முனையில் செல்போன் மற்றும் பணம் பறித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இவ்வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்ற அவர் வெளியே வந்த பின்னர் மீண்டும் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து மண்டை விஜயையை குண்டர் சட்டத்தில் அடைக்க கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர், மாநகர துணை ஆணையர் ஷியாமளாதேவி ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்படி, மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவின்பேரில் மண்டை விஜயை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஏற்கனவே கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள விஜயிடம் குண்டர் சட்ட கைது ஆணை சார்வு செய்யப்பட்டது.