![Cuddalore Muthunagar ghost incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/YHHA3Fj0DUYYRo3UIHvC3zlfvBn3ctEjnvwJenfXdRE/1660132410/sites/default/files/inline-images/1534.jpg)
கடலூர் மாநகரில் முதுநகர் பகுதியில் உள்ள பென்சனர் லைன் தெருவில் ஒரு டாக்டருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டைச் சுற்றிலும் செடி கொடி மரங்கள் வளர்ந்து புதர் மண்டி பாழடைந்து காணப்படுகிறது. அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் சென்னையில் வசிப்பதால் இது பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
இந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடுகள் மீது கடந்து சில நாட்களாக திடீரென தண்ணீர், கற்கள் வந்து விழுந்து உள்ளன. இதனால் அந்த பாழடைந்த வீட்டில் பேய்கள் நடமாட்டம் இருக்கும் என அப்பகுதி மக்கள் மத்தியில் பீதி எழுந்தது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். திடீர் திடீரென்று வீடுகள் மீது கல் விழுவதற்கு காரணம் என்னவாக இருக்குமென்பது குறித்து கண்காணித்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பாழடைந்த வீட்டில் இருந்து தனது வீட்டுக்குள் பாம்புகள் வருவதாகவும், அதனால் அந்த பாழடைந்த வீட்டை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றுவதற்காக பேய்கள் நடமாட்டம் இருப்பதாக கூறியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அதோடு அருகில் உள்ள மற்ற வீடுகள் மீது கல்லெறிந்து நாடகமாடியதையும் கண்டறிந்த போலீசார் அந்தப் பெண்ணை எச்சரித்து அறிவுரை கூறிய அனுப்பி உள்ளனர். இதன் மூலம் பேய் நடமாட்டம் இருக்குமோ என்று நம்பிய அப்பகுதி மக்களின் பயத்தை போலீசார் தற்போது போக்கி உள்ளனர்.