கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையைக் குறித்தும், கடைகள் திறப்பது தொடர்பாகவும் சார் ஆட்சியர் விசுமகாஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் வர்த்தகச் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், வணிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நாளை (05.05.2020) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தினமும் கடைகள் திறந்து இருக்கலாம். அத்தியாவசியப் பொருட்களை மக்கள் தங்கு தடையின்றி வாங்கிச் செல்வதற்காக அரசு பிறப்பித்த அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல கடையில் ஐந்து ஊழியர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. வைரஸ் சம்மந்தமாக விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கையைக் கடைகளில் எடுத்திருக்க வேண்டும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்குமாறும், கிருமி நாசினி வைத்து கைகழுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் கடைகளைத் திறக்க அனுமதி கிடையாது. ஒரே வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் இருந்தால், அதில் இரண்டு கடைகள் மட்டுமே திறக்க அனுமதி. பின்னர் அடுத்த நாளைக்கு இரண்டு கடைகள் திறக்க அனுமதி என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா மற்றும் டிஎஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.