
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் அருகில் இருந்த பள்ளி மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் திருமுல்லைவாயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகிலேயே தனியார் பள்ளி ஒன்றும் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் தின்னர் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தொழிற்சாலைக்கு அருகிலேயே செயல்பட்டு வந்த பள்ளியின் மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.