![lake](http://image.nakkheeran.in/cdn/farfuture/xXx5846FgJJUlq29gtP3E-mZ_llH9YX7_cuLd96fFe4/1592843987/sites/default/files/inline-images/lake.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது எஸ். ஏரிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தின் அருகில் உள்ள ஏரியின் புதரான பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடப்பதாக அங்கு ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் கூறியுள்ளனர்.
இந்த தகவல் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரியவந்தது. உடனடியாக சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
இதனிடையே பண்ருட்டியில் புதிதாக பதவியேற்றுள்ள டிஎஸ்பி பாபு பிரசாந்த் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இறந்த பெண்ணுக்கு சுமார் 40 வயதுக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய தகவல் தெரியவில்லை.
இந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, மேலும் தவறான பழக்கவழக்கங்கள் காரணமாக யாராவது அவரை கொண்டு வந்து கொலை செய்து வீசி விட்டுச் சென்றார்களா இப்படி பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எலும்புக்கூடு கிடந்த இடத்தில் கிடந்த துணிகளை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஏரி பகுதியில் ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது கண்டு அப்பகுதி மக்கள் பயத்திலும், மிரட்சியில் உள்ளனர்.