![cc](http://image.nakkheeran.in/cdn/farfuture/AkyNcl0O5AScvtq0dmSC5AS6LUM0F4ETtRap-60fDZk/1593086057/sites/default/files/inline-images/659_5.jpg)
ஒவ்வொரு ஆண்டும் மே மாத வாக்கில் தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடப்பது வழக்கம். இதில் அந்தந்த தாலுகாவிற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நெல், கரும்பு, மரப்பயிர் ஆகிய சாகுபடிகள் பற்றிய கணக்குகள் மற்றும் பிறப்பு-இறப்பு, முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் பற்றிய விவரங்கள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் பற்றிய விவரங்கள், வரி அதற்கான கணக்குகள் இப்படிப்பட்ட கணக்கு, வழக்குகளை முறையாக எழுதி ஜமாபந்தி அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்கள்.
ஜமாபந்தி நடத்தும் அதிகாரி அதை சரிபார்த்து கையொப்பமிட்டு திருப்பிக் கொடுப்பார்கள். அதேபோன்று இந்த ஜமாபந்தி நடைபெறும்போது, ஒவ்வொரு கிராம மக்களும், விவசாயிகளும் தங்கள் நிலங்களுக்கு பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை ஏற்கனவே வருவாய்த் துறையினருக்கு அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தும் பிரச்சனைகள் இவைகளை எல்லாம் ஜமாபந்தியின் அதிகாரியாக வருபவர்களிடம் புகார் மனுவாக கொடுப்பது வழக்கம்.
அந்த மனு மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஜமாபந்தி நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வி குறியுடன் இருந்த இந்த நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர்களும், கிராம உதவியாளர்களும், பொதுமக்களும் குழப்பத்தில் இருந்தனர். காரணம் கரோனா பரவல் காரணமாக ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்களும் அந்தப் பணிகளை கடந்த மூன்று மாதங்களாக செய்து வந்துள்ளனர். இதனால் ஜமாபந்தியில் அளிக்கப்படும் வருவாய் தீர்ப்பாய கணக்கு வழக்குகளை அவர்கள் எழுதவில்லை. பொதுமக்களும் கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி, அரசின் தடை சட்டம் இப்படிப்பட்ட காரணங்களால் ஜமாபந்தி இந்த ஆண்டு நடைபெறாது என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் திடீரென ஜமாபந்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி திட்டக்குடி தாலுகாவில் 25ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஜமாபந்தியில் பெண்ணாக குறுவட்டம் 26-ம் தேதியும், திட்டக்குடி கிழக்கு 29-ஆம் தேதி திட்டக்குடி மேற்கு, தொழுதூர் குறுவட்டம் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
“மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற தாலுகாக்களிலும் இதே தேதிகளில் ஜமாபந்தி நடைபெறும் என்றும் அதற்கான அதிகாரிகளையும் நியமித்துள்ளார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் கூறுகையில், நாங்கள் கடந்த பிப்ரவரியில் இருந்து கரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளோம். இதனால் மற்ற வருவாய் பணிகளை பார்க்க முடியவில்லை. பொதுமக்களுக்கான பணிகளிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் திடிரென்று ஜமாபந்தி நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால், கிராம கணக்குகளை சரிபார்க்க எழுத போதிய கால அவகாசம் தராமல் திடிரென அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஜமாபந்தியை ரத்து செய்துள்ளது. இந்தநிலையில் நம் மாவட்டத்தில் மட்டும் ஜமாபந்தி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கும், மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது அப்படியே ஜமாபந்தி நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்.
“அதேநேரத்தில் இப்படிப்பட்ட அசாதாரணமான சூழ்நிலையில் ஜமாபந்தி நடைபெற்றால் கிராம மக்கள் விவசாயிகள் ஒவ்வொரு தாலுகாவிலும் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள், அதன்மூலம் கரோனா நோய் பரவல் அதிகரிக்கக்கூடும். நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜமாபந்தி நடைபெறும்போது மக்கள் கூடினால் நோய் பரவாதா” என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.