விழுப்புரம் மாவட்டம், உளூந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் வசிப்பவர் கேசவன். இவரது 7 வயது மகன் கருணா அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
சம்பவத்தன்று மாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு செல்வதாக கூறிய சிறுவன், வழிதெரியாமல் காவல்நிலையம் முன்பு நின்றுகொண்டு அழுதுள்ளான். அப்போது பணியில் இருந்த காவலர் அஷ்டலெட்சுமி என்பவர், அந்த சிறுவனை பார்த்து அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது சிறுவன் தனது பெயரை மட்டும் கூறுயுள்ளார். தாய், தந்தை மற்றும் எந்த பள்ளியில் படிக்கிறான் என்பதை கூறவில்லை. அவன் அழுகையை நிறுத்த ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து, பின்னர் ஒவ்வொரு அரசுப்பள்ளியாக இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சென்று கேட்டுள்ளார். அங்குள்ளவர்கள் இந்த சிறுவன் இங்கு படிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
திருச்சி - சேலம் சந்திப்பு சாலையில் உள்ள பள்ளிக்கு கடைசியாக சிறுவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார் காவலர் அஷ்டலெட்சுமி. அப்போது, திடீரென்று சிறுவன் பாளையப்பட்டு தெரு பக்கம் கையை காட்டினார். அந்த தெருவுக்கு இருசக்கர வாகனத்தை திருப்பியபோது, அங்கு உள்ள ஒரு வீட்டை காட்டினான்.
அந்த வீடு சிறுவனின் பாட்டி வீடு. பிறகு உரியவர்களிடம் சிறுவனை ஒப்படைத்தார். அவர்களிடம் அறிவுரை கூறி நடந்ததை எழுதி வாங்கினார். சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைத்த பெண் காவலருக்கு அந்தப் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.