![The court ordered the school education department for Case related to punishment in schools](http://image.nakkheeran.in/cdn/farfuture/54CLvjHCodmSvVjywBNGiVLW2DLfTLxgjgiP3UDl4oY/1714067986/sites/default/files/inline-images/high-court-ni_13.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.