முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியைகள் 5 பேரை விசாரிப்பதற்கான சம்மன் கொடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த 17ஆம் தேதி கேளம்பாக்கம், பழனி கார்டனுக்குச் சென்ற நிலையில் காயத்திரி, பிரவீனா உள்ளிட்ட ஆசிரியைகள் 5 பேரும் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின் 5 ஆசிரியைகளின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், நேற்று (20.07.2021) சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜரான 3 ஆசிரியைகளின் வாக்குமூலங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் பதிவு செய்துகொண்டனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும் என 3 ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 ஆசிரியைகள் தொடர்ந்து தலைமறைவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.