தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.11.2021) மாலை மாமல்லபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. அதேபோல், டெல்டா மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்துவருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்துவருகிறார்கள். இந்நிலையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அங்கு இன்று மாலையே ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில், மழை பாதிப்பு மற்றும் மழையால் பாதிப்படைந்துள்ள விளைநிலங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.
அதேபோல், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதத்தை ஆய்வுசெய்து அறிக்கை தர அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியார் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வுசெய்து நிவாரண நடவடிக்கையைத் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.