கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு கவுன்சிலராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது வார்டின் சில பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர், தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது குறித்து கவுன்சிலர் கவிதாவிடம் புகார் செய்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனதால், கவிதாவின் கணவர் கவுதமை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ‘ஏரியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வாலிபர் கவுதம் கூறுகிறார். அதற்கு கவுன்சிலர் கவிதா, ‘அப்படியெல்லாம் செய்ய முடியாது’ என்று கூறுகிறார். அப்போது அந்த வாலிபர், ‘சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாவிட்டால், கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்’ எனக் கூறுகிறார். இப்படி வாக்குவாதம் தொடர்கிறது. அப்போது, அங்கிருந்த பெண் ஒருவர் வாலிபருக்கு ஆதரவாக வர, அவரிடம் கவிதாவின் கணவர், ‘நீ எங்களுக்கு ஓட்டுப்போட்டியா?’எனக் கேள்வி கேட்கிறார். அப்போது வாலிபர் குறுக்கிட, கவிதாவின் கணவர் கவுதமை கண்ணத்தில் அறைந்து தாக்கியதோடு வீடியோ முடிகிறது.
இந்த தாக்குதல் கழுத்தில் எழும்பு முறிவு ஏற்பட்ட கவுதமை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கவிதாவின் கணவர், வாலிபரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.